Translate

Friday, April 26, 2013

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர். !!!!



திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பிட்டி தியாகராயர் பிறந்த தினம் இன்று .அவரின் பெயராலே சென்னையில் உள்ள தி நகர் வழங்கப்படுகிறது .ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார் .காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்த பொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது .காந்தியடிகள் சென்னை வந்த பொழுது அவரை கோலாகலமாக வரவேற்றார்

அதற்கு முன்னரே சென்னை மகாஜன சபையை நிறுவி ஆங்கிலேய அரசிடம் கோரிக்கைகள் வைக்கும் பணியை செய்து வந்தார் .முக்கியமான அரசு பொறுப்புகளில்,நிர்வாகத்தில் பிராமணர்களே பெரும்பாலும் நிறைந்து இருந்தார்கள் கோயில்களில் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் ஜாதியை சொல்லி உள்ளே அனுமதிக்காத கொடுமைகளும் நடந்தன .காங்கிரஸ் கட்சியிலும் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பதாக பிராமணர் அல்லாதவர்கள் கருதினார்கள் .தியாகராயர் சென்னையிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தை ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் பிராமணர்கள் இவரைக் கோபுரத்திலேறி நன்னீராட்டு நீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. இவரின் கணக்குபிள்ளை பிராமணர் என்பதால் அனுமதிக்கப்பட்டார்

இவையெல்லாம் ஒன்று சேர பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என யோசித்தார்கள்.1913 இல் திராவிட சங்கம் உருவானது .மூன்றாண்டுகள் கழித்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், தியாகராயர் என பிராமணர் அல்லாத எல்லா தலைவர்களும் தோற்று இருந்தார்கள் . நவம்பர் இருபதில் எத்திராசு இல்லத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' எனும் அமைப்பை உண்டு செய்வது என முடிவு செய்தார்கள் .அந்த சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது தான் ஜஸ்டிஸ் எனும் இதழ் .அதனால் நீதிக்கட்சி என பெயர் பெற்றது அமைப்பு .

சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டு வெல்லிங்டன்.தியாகராயரிடம், சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ்இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும். வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னார் ஆளுநர்.தியாகராயர் கம்பீரமாக,"எங்களின் அடையாளத்தை விடுத்து ஆடை அணிய முடியாது .எப்பொழுதும் போல வெள்ளை ஆடை தான் அணிந்து வருவேன் .விருப்பம் இல்லாவிட்டால் நான் வரவேற்க வரவில்லை "என சொல்ல வெள்ளை ஆடையுடன் வந்து வரவேற்க அனுமதி தரப்பட்டது .அதனால் வெள்ளுடை வேந்தர் என அறியப்பட்டார்

அடுத்து 1920 இல் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் படி நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் என்கிற பெருமையை தியாகராயர் பெற்றார் .அப்பொழுது சென்னை ஆயிரம் விளக்குபகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின் முதல் மதிய உணவு திட்டம் .அடுத்த வருடம் நடைபெற்ற மாகாணத்தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க நீதிகட்சி வென்றது .முதல்வர் பதவி இவரைத்தேடி வந்த பொழுது அதை சுப்பராயலு ரெட்டியாருக்கு விட்டுக்கொடுத்தார்

மிகப்பெரிய செல்வந்தர் இவர் .தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார்.என்றாலும் எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியல் களம் புகுந்தார் அவர்

ஒரு குறிப்பிடத்தகுந்தசம்பவம் .சென்னை பின்னி மில்லில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது .அதை முன்னெடுத்து நடத்தியவர் தமிழ் தென்றல் திரு வி.க ஆட்சியில் நீதிக்கட்சி இருந்தாலும் காவல் துறை ஆங்கிலேயே அரசின் கட்டுப்பாட்டில் தான இருந்தது .அவரை கைது செய்ய உத்தரவு வந்தது .அப்பொழுது மாற்று கட்சியில் இருந்தாலும் தியாகராயர் கொதித்து எழுந்து ,"திருவிகவை கைது செய்தால் இந்த ஆட்சி எங்களுக்கு தேவையில்லை ."என எச்சரித்தார் .கைது நடவடிக்கை நின்றது .அத்தகு சிறப்பு மிகுந்த வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர்.
 

No comments: