Translate

Saturday, September 15, 2012

சாஸ்திரி !!!

ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அதன்பின் சாஸ்திரி பிரதமர் ஆனார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.

மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை.

பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுருத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.

பாகிஸ்தான் போர்
==============

இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் .
நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்...

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார். 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் .

சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.

மரணம்
======
போர் நிறுத்த சாற்றுதலுக்கு பின் அதனை அமல் படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.

அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது.மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவரே பதவியில் உள்ள போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்தியாவை உலுக்கிய நம்ப இயலாத செய்தியாக இருந்தது அது. உலகமும் கொஞ்சம் ஆடிப் போனது. ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டதுஎன்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார்.

சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள் என்பது சிலிர்க்க வைக்கும் செய்தி.

எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத் தான் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.


No comments: