Translate

Thursday, August 9, 2012

பாரதியார் கவிதைகள் !! (Mahakavi Subramaniyam Bharathi_Poet )

                                                  ஞாயிறு -- வணக்கம் 


கடலின் மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா,
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்டுளி யும்விழி யாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.
1

என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
2

காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.                                                                                     3

                                                        காணி நிலம் 

காணி நிலம்வேண்டும், -- பராசக்தி
காணி நிலம்வேண்டும்; -- அங்குத்
தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -- அந்தக்
காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; -- அங்குக்
கேணி யருகினிலே -- தென்னைமரம்
கீற்று மிளநீரும்,
1

பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்
பக்கத்திலே வேணும்; -- நல்ல
முத்துச் சுடர்போலே -- நிலாவொளி
முன்பு வரவேணும்;-அங்குக்
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற் படவேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
2

[பாட பேதம்]:
‘வாச்வினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி’
என்பது ஒரு பிரதியில்

‘இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி என்ற வரியை அடுத்து காணப் படுகிறது.

-- கவிமணி

பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்
கூட்டுக் களியினிலே -- கவிதைகள்
கொண்டு தரவேணும்; -- அந்தக்
காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்
காவ லுறவேணும்; -- என்றன்
பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.


நந்தலாலா
                      [ ராகம் -- யதுகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]

காக்கைச் சிறகினிலே
   நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
   நந்தலாலா;
1

பார்க்கும் மரங்களெல்லாம்
   நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
   நந்தலாலா;
2

கேட்கு மொலியிலெல்லாம்
   நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
   நந்தலாலா;
3


தீக்குள் விரலைவைத்தால்
   நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
   நந்தலாலா.                                                     4    


மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறு மனமே
   பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
   நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
   தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
   உரைத்தேன் அடங்கி உய்யுதி
யால். 

சென்றதினி மீளாது, மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்:
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.


செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே --
(செந்தமிழ்) 1

வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -- நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
(செந்தமிழ்) 2

காவிரி தென்பெண்ணை பாலாறு -- தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -- என
மேவிய யாறு பலவோடத் -- திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 3

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -- நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு -- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
(செந்தமிழ்) 4

நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.
(செந்தமிழ்) 5

கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -- நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.
(செந்தமிழ்) 6

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 7

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
(செந்தமிழ்) 8

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -- எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -- சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
(செந்தமிழ்) 9

சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 10


தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
  இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
  வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
  பரவும்வகை செய்தல் வேண்டும்.
1

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
  உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
  வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
  வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
  கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
  விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
  இங்கமரர் சிறப்புக் கண்டார்.
4


வ.உ.சி.க்கு வாழ்த்து
‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!
{[குறிப்பு]: “சுயராஜ்ய தினம்” தூத்துக்குடியில் 1908ஆம் ஆண்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா முதலியோரால் கொண்டாடப்பட, இருவரும் சிறைப்படுகின்றனர். அது சம்பந்தமான வழக்கில் பாரதியார் சாட்சி கூறினார்.}


புதிய ஆத்திசூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

நூல்

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
5
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
10
ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
15
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்
20
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தேர்ச்சி கொள்
25
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
30
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
சைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்
35
சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
40
ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
45
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
50
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
55
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
60
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
65
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்குஇடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
70
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
75
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொ டேல்
80
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனைக்கொல்
85
யவனர்போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
90
ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்
95
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
(உ)லுத்தரை இகழ்
100
(உ) லோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு
105
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
110


பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
1

சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
2

கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
3

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, -- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
5

காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
6

பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
8

துன்பம் நெருங்கிவந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
12

வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
13

வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
14

சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா.
16
 
                           









No comments: