Translate

Wednesday, August 8, 2012

ஐன்ஸ்டீனின் மூளை ....

படத்தில் இருப்பது மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை.இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.அவருடைய மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியந்து போய் பேசுகிறார்கள்.இத்தனைக்கும் அவரது மூளையில் 3 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம்,அது பத்துசதவிகிதமாக இருந்திருந்தால் என்னென்ன கண்டுபிடிப்புகள் வந்திருக்குமோ!.
இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித கண்டுபிடிப்புகளில் உங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது எது என
்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்,சற்றும் தாமதிக்காமல் உடனடியாக புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.
அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில் இருக்கிறதா?பல் துறை நிபுணர்கள் எழுதிய நூல்கள்,பல விலை உயர்ந்த புத்தகங்கள் குவிந்திருக்கும் இடம் நூலகம். இத்தகு நூல்களை நூலகங்களில் மட்டுமே ஒருங்கே நாம் கண்டு,பயன்படுத்திட முடியும்.நம்மில் எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம் செல்லும் வழக்கம் இருக்கிறது?
இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில் 20 நூலகங்களாவது இருக்கவேண்டும்.ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில் கூட்டத்தை காணோம்.ஆனால் இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20 இருக்கின்றன,அத்தனையிலும் கூட்டம் அலைமோதுகிறது.இதுதான் இன்றைய தமிழ்க்குடிகளின் நிலைமை.
சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ஒருகோடியே முப்பது லட்சம் மக்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாம்.அதில் 50 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்களாம்.30 சதவிகிதம் பேர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாம்.கொடுமை.
இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கினால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம் போல்,கடற்கோளினால் அழிந்த குமரிக்கண்டம் போல்,கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற நிலை இந்த தமிழ்ச்சமுதாயத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

- முக நூல்  இருந்து -

No comments: