Translate

Friday, July 27, 2012

யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்

சுதந்திரப் போராட்டம் என்பது இவர் போன்ற வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போதுதான் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை முழுமையாக உணர முடியும்

'யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். ஆனால், அவரது குடும்பத்தினரே ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கபட்டு, எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் மாண்டுபோனதுதான் வரலாற்று உண்மை.1854-ம் ஆண்டு திப்புவின் பிள்ளைகளில் உயிரோடு இருந்த ஒரே ஆண் வாரிசான குலாம் முகமது, தன்னைக் காப்பாற்றும்படி விக்டோரியா மகாராணிக்கு எழுதியுள்ள கடிதம் திப்புவின் வாரிசுகளை ஆங்கிலேய அரசு எப்படி அச்சுறுத்தியது என்பதற்குச் சாட்சி. திப்புவின் பிள்ளைகள் விஷயத்தில் நடந்தது அவமதிப்பு என்றால், சின்ன மருது மகனுக்கு நடந்தது உச்சபட்ச அடக்குமுறை. சகித்துக்கொள்ள முடியாத வரலாற்று சோகம்!மருது சகோதரர்கள் குறித்து கர்னல் வெல்ஷ், 'ராணுவ நினைவுக் குறிப்புகள்’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர், மருது சகோதரர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவரது நினைவுகளில் வெளிப்படும் பெரிய மருது மற்றும் சின்ன மருதுவைப் பற்றிய சித்திரங்கள் அபாரமானவை. மருது சகோதரர்களைப் பற்றி வெல்ஷ் மிகவும் வியந்து சொல்கிறார்.

பெரிய மருதை, பொதுமக்கள் வெள்ளை மருது என்றே அழைத்து இருக்கிறார்கள். பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல்வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது, தேர்ந்த திறமைசாலி. அவரது தலையசைப்பை மக்கள் சட்டமாக மதித்தனர். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூட கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம். வெளியே வரலாம். அன்போடும் பண்போடும் பேசிப் பழகக்கூடியவர்.'மருதுகளிடம் இருந்துதான் வேல் வீசவும், களரி சுற்றவும் கற்றுக்கொண்டேன்’ என்று கூறும் வெல்ஷ், போரின் முடிவில் மருது ஒரு மிருகத்தைப் போல வேட்டை ஆடப்பட்டதையும், தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கில் இடப்பட்டதையும் மன வருத்தத்தோடு பதிவு செய்து இருக்கிறார்.வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசிமகன் துரைச்சாமி, பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. துரைச்சாமியின் இயற் பெயர் முத்து வடுகநாத துரை என்கிறது சிவகங்கை அம்மானை நூல். சின்ன மருதுவோடு மிகுந்த நட்பாகப் பழகிய வெல்ஷ், தன்னை அவர் மிகவும் அன்போடு நடத்தியதோடு, ஒவ்வொரு முறையும் தனக்காகத் தனிச் சுவைமிக்க ஆரஞ்சுப் பழங்களைக் கூடை கூடையாகப் பரிசு தருவது வழக்கம் என்று தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, தப்பிச் சென்ற ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று காரணம் காட்டி மருதுவோடு, ஆங்கிலே யர்கள் யுத்தம் செய்தார்கள். அதன் பின்னால் இருந்த ஆங்கிலேயர்களின் அழித்தொழிப்பு மனநிலையைப்பற்றி மருது சகோதரர்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் விரிவாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, 1813-ம் ஆண்டு கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய மருது பாண்டியர் வரலாற்றை விரிவாக சுட்டிக்காட்டி அன்றைய பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயருக்கு இருந்த கோபத்தை விளக்குகிறார் கிருஷ்ணன்.பாளையக்காரர் மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்துக்கு தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற்பார்வையில் விசாரணை ஏதும் நடத்தாமல் தூக்கிலிட ஆணை தரப்பட்டது. இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதம் இன்றி உடனே நிறைவேற்றப்பட்டன. மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர். 1801-ம் ஆண்டு விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.


இரண்டு அல்லது மூன்று பேர்களாக ராணுவ மன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு, திருப்தியடையாத ஆங்கில அரசு, ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால், 1000 கூலிச் சக்கரங்கள் பரிசாக வழங்கப்படும் என்று, கர்னல் அக்னியூ 1801 அக்டோபர் 1-ல் சிவகங்கையில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி, மருதுவின் தளபதிகள் மற்றும் உடனிருந்த முக்கிய வீரர்கள் என 72 பேர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.நாடு கடத்தப்பட்டவர்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் திவான், 'இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற நூலில் புதிய தகவல்களைச் சுட்டிக்காட்டுகிறார்.பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் கைகளில் விலங்கு பூட்டி, கை கால்களையும் இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும்போது சங்கிலிச் சத்தம் 'கிளிங் கிளிங்’ எனக் கேட்டதால், அந்தக் கைதிகள் 'கிளிங்கர்கள்’ என அழைக்கப்பட்டனர். நாளடைவில், அந்தப் பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது. அந்தக் கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக்கூட முடியாத அளவில் சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கை விலங்கில் தொங்கவிட்டு இருந்தனர். ஏனென்றால், அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். அதில் ஒருவர்... சின்ன மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர், முக்கிய படைத் தளபதியான சேக் உசேன் என்ற இளைஞர்.இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படை யின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரை, திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார். இந்த சேக் உசேன்தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின்போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்குத் தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே இறந்தார்.1802 பிப்ரவரி 11-ல் தளபதி வெல்ஷ், துரைச்சாமியை நாடு கடத்தி கப்பலில் அனுப்பிவிட முயன்ற தருணத்தைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். 'கைதிகளைக் கப்பலில் ஏற்றி அனுப்பும் பொறுப்பை நான் லெப்டினன்ட் ராக் ஹெப்டிடம் ஒப்படைத்த அந்த நாளை நான் என்றும் மறக்க முடியாது. தூத்துக்குடியில் இருந்த ராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால், நாடு கடத்தல் தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டு இருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


உரிய மரியாதையுடன் துரைச்சாமியை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், 17 வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் ஒடுங்கிய நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.பினாங்கின் முதல் கவர்னராக இருந்த சர் பிரான்சிஸ் லைட்டின் மகளைத்தான் வெல்ஸ் திருமணம் செய்திருந்தார். கட்டபொம்மனை அழித்த மேஜர் பேனர்மென், பினாங்கில் அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு கிறிஸ்துவ சபையைக் கட்டிக் கொண்டு இருந்தார். அந்த கட்டடப் பணிக்கு கைதிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவராக உடல் மெலிந்து ஒடுங்கிய நிலையில் இருந்தார் துரைச்சாமி. அந்த திருச்சபையைப் பார்வையிட வந்திருந்த வெல்ஸை சந்தித்த துரைச்சாமி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். வெல்ஸால் தன் முன்னே நிற்கும் மனிதனை நம்பவே முடியவில்லை. தனது நண்பன் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியா இந்த நிலையில் இருக்கிறார் என் நெகிழ்ந்துபோய் அவரோடு அன்பாகப் பேசியிருக்கிறார். தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதித் தருவதாகச் சொன்ன துரைச்சாமி, அதை வெல்ஸ் எப்படியாவது சிவகங்கைக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார். தனது பதவி மற்றும் ஆங்கில அரசின் கண்டிப்பு காரணமாக தன்னால் அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மறுத்த வெல்ஸ், பரிதவிப்போடு தன் முன்னே நின்ற துரைச்சாமியின் உருவம் தன் மனதில் சொல்ல முடியாத வேதனையை உருவாக்கியது என்று எழுதி இருக்கிறார்.மறவர் சீமையை ஆண்ட மன்னர்களின் மகன் கைதியாக ஒரு கடிதத்தைக்கூட அனுப்ப முடியாமல் கைவிடப்பட்டு நிற்கும் காட்சி வரலாற்றின் அழியாத துயரச் சித்திரமாகவே உள்ளது. அதன் பிறகு, துரைச்சாமி என்ன ஆனார் என்ற விவரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை. மேஜர் பேனர்மென் பினாங்கில்தான் இறந்துபோனார். இன்றும் அவரது கல்லறை அங்கே இருக்கிறது என்று துரைச்சாமி பற்றிய பல விவரங்களை எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ஜெயபாரதி குறிப்பிடுகிறார்.பெரிய மருது தூக்கிலிடப்படுவதன் முன்பாக தனது வாரிசுகளைப் பாதுகாத்து, சொத்துக்களைத் தர்ம காரியங்களுக்கு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று உருவிய கத்தி மீது சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறார். அக்னியூ துரையும் அப்படியே செய்வதாக சத்தியம் செய்திருக்கிறார். ஆனால், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு துரைச்சாமி உட்பட 71 பேரை வாழ்நாள் முழுவதும் அயல்தேசத்தில் ஒடுங்கிக்கிடக்கும்படி செய்தது ஆங்கில அரசு.1891 மே 18-ம் தேதி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைக்காரன் என்பவர், மதுரை ஆட்சி யாளரிடம் ஓய்வூதியம் கேட்டு அளித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, ஆங்கிலேய அரசிடம் தனக்கான பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், திடீரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகிறார். துரைச்சாமியின் வாழ்க்கையைப்பற்றி தகவல்கள் இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது வாழ்வின் சில தருணங்களே நம் முன்னே வெளிச்சமிடப்பட்டு இருக்கின்றன. ஒரு கைதியாக அவர் என்னவிதமான இன்னல்களை அனுபவித்தார்... ஏன் அதை மௌனமாக ஏற்றுக்கொண்டார்?15 வயதில் சிறைக்குப் போய் வயதாகி நோய்மை யுற்று வெளியே வந்து எந்த உரிமையும் இன்றி இறந்துபோன துரைச்சாமியின் வாழ்க்கை, சொல்லில் அடங்காத துயரம்கொண்டதாகவே இருக்கிறது. அந்த நினைவுகள் வெறும் வரலாற்றுத் தகவல்கள் அல்ல. ஆங்கிலேய அதிகாரம் எவ்வளவு ஒடுக்குமுறையானது என்பதன் அத்தாட்சி அது.வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதையுண்டுபோன குரல்களைத் தேடிக் கண்டறிவதே உண்மையான வரலாற்று ஆய்வாளனின் வேலை. துரைச்சாமி விஷயத்தில் அந்தப் பணி இன்னமும் பாக்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. துரைச்சாமிக்குக் கிடைத்த சிறிது வெளிச்சம்கூட அவரோடு சிறைப்பட்ட மற்ற 71 பேருக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? விடை இல்லாத கேள்விகள் கொப்பளிக்கின்றன.


சுதந்திரப் போராட்டம் என்பது இப்படி வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போதுதான் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை முழுமையாக உணர முடியும்.

No comments: